நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதார மணம் உள்ளிட்ட பல இஸ்லாமிய மத நடைமுறைகளின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாயன்று விசாரிக்கத் தொடங்கியது. 


இது தொடர்பான வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருவதற்கு முன்பு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), தேசிய பெண்கள் ஆணையம் (NCW), தேசிய சிறுபான்மை ஆணையம் (NCM) ஆகியவை இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சூர்யா காந்த், எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, பலதார மணத்தை எதிர்த்து தொடரப்பட்ட தனி மனு மீதான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.


ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், கிரண் சிங் தலைமையிலான ஐந்து இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பிரிவு 494 இன் கீழ், பலதார மணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படுகிறது. பலதார மணம் என்ற நடைமுறை, இந்திய தண்டனை சட்டத்திற்கு முரணானது என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பலதார மணம் தவிர, நிக்காஹ் ஹலாலா, நிக்கா மிஸ்யார் மற்றும் நிக்காஹ் முட்டா ஆகிய நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள பிற மனுக்கள் மீது, மூத்த வழக்கறிஞர் ஷ்யாமின் வாய்மொழி கோரிக்கையின் பேரில், உச்ச நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய சிறுபான்மை ஆணையம் ஆகியவற்றை பிரிதிவாதிகளாக சேர்த்தது. மனுதாரர்களில் ஒருவரான திவானுக்கு பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆஜரானார்.


"பல நபர்களுக்கு நோட்டீஸ் செல்ல வேண்டியிருப்பதால், தசரா விடுமுறைக்குப் பிறகு நாங்கள் இதை விசாரிப்போம்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பலதார மணத்தை எதிர்த்து இந்துப் பெண்ணின் சார்பாக வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாதம் முன்வைத்தார். 


1937ஆம் ஆண்டு முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937 பிரிவு 2இன் கீழ் அனுமதிக்கப்பட்ட இந்த நடைமுறையை முஸ்லீம்கள் மத்தியில் நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி இதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.


ஐபிசியின் 494வது பிரிவின் கீழ் பலதார திருமணத்திற்கு தெளிவான தடை இருக்கிறது. பிற மதத்தினர் இந்த அனுபவிக்க முடியாததால், இத்தகைய தனி சட்டங்கள் பாரபட்சமானதாக இருக்கின்றன என மனுதாரர்கள் தெரிவித்தனர்.


ஆகஸ்ட் 2017இல், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், அது அரசியலமைப்பிற்கு முரணானது, பாரபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என கூறியது. ஷயாரா பானோ தலைமையிலான பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வந்தது.