நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பயனாளர்கள் சிலர் இன்று (ஏப்ரல் 3) சமூக வலைதளங்களில் வங்கியின் ஆன்லைன் சேவை தடைபட்டதாக புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாலாஜி சுப்புராம் என்று எஸ்பிஐ வாடிக்கையாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று காலையிலேயே எஸ்பிஐ வங்கி இணையதளம் வேலை செய்யாததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று காலையில் இருந்தே எஸ்பிஐ வங்கி ஆன்லைன் சேவை பக்கம் இயங்கவில்லை" என்று ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல் விஜயவாடாவைச் சேர்ந்த கே சிவ நாகராஜூ என எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரும் ட்விட்டரில் இதே புகாரை தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து காலை முதலே யுபிஐ பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய இயலவில்லை" என்று கூறியிருந்தார்.
சமூக வலைதளங்களையும் தாண்டி Downdetector என்ற இணையதள சேவைகள் தடைபடுதல் பற்றி டிராக் செய்து தெரிவிக்கும் தளமும் எஸ்பிஐ வங்கி இணையதள பக்கம் முடங்கியதை தெரிவித்திருந்தது. அந்த இணையதளத்தின் பதியப்பட்ட தகவலின்படி பார்த்தால் நேற்று காலை 9 மணி முதல் எஸ்பிஐ வங்கி ஆன்லைன் சேவைகளில் பிரச்சனை இருந்துள்ளது. அது காலை 10.59 மணியளவில் இந்தத் தாக்கம் மிகவும் மோசமாக அதிகரித்தது.
எஸ்பிஐ விளக்கம்:
இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், "வங்கியின் ஆன்லைன் சேவையில் சிறிய தொழில்நுட்பப் பிரச்சனை ஏற்பட்டது. அது பின்னர் சரிவு செய்யபட்டு இப்போது சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சில மணி நேரம் ஏற்பட்ட தடங்கலுக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களின் மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். எஸ்பிஐ வங்கியானது இதுபோன்ற தொழில்நுட்ப சறுக்கல்கள் ஏற்படாமல் வங்கி சேவையை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நாங்கள் உங்கள் பொறுமைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
அண்மையில் தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியிலும் ஆன்லைன் சேவையில் சிறிய அளவில் தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 9 ஆம் தேதிகளில் எச்டிஎஃப்சி வங்கி ஆன்லைன் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் சேவை மீட்கப்பட்டது. அப்போதும் எச்டிஎஃப்சி வங்கி சார்பில் சர்வர் பிரச்சனையே சேவை முடக்கத்திற்குக் காரணமாக தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 1 ஆம் தேதி பராமரிப்பு சேவை:
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியன்றும் எஸ்பிஐ வங்கியின் யுபிஐ உள்ளிட்ட சில சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால் அது குறித்து வங்கி ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.