நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை என்பது ஒவ்வொரு இறுதியாண்டு கல்லூரி மாணவருக்கும் ஏன் அலுவலக ஊழியர்களுக்குமான வாழ்நாள் கனவு. வீட்டில் மகனோ, மகளோ படித்து முடித்து வேலை கிடைத்து நல்ல சம்பளத்தில் தேர்வானால் அந்தக் குடும்பமே தலை நிமிரும் என்பதைக் கண்கூடாய்க் கண்டிருக்கிறோம். 


மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில், வேலைவாய்ப்பு என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடி, ஐஐஎம் மாணவ - மாணவிகளுக்கு எத்தனை லட்ச ரூபாய் ஊதியம் என்பது அண்மைக் காலங்களில் பேசுபொருளாகவே மாறி விட்டது. அந்த வகையில் ஐஐஎம்  சம்பல்பூர் மாணவி அவ்னி மல்ஹோத்ரா ஆண்டுக்கு 64.61 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தேர்வாகி உள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 146.7% அதிக ஊதியம் ஆகும். 


6 கட்ட இன்ட்டர்வியூக்களை வெற்றிகரமாக முடித்து அவ்னி மல்ஹோத்ரா இந்த வேலையைப் பெற்றுள்ளார். ஐஐஎம் சம்பல்பூரில் படிக்கும் முன்பு, இன்ஃபோசிஸில் 3 ஆண்டுகள் அவ்னி வேலை படித்துள்ளார். முன்னதாக கணினி அறிவியலில் பி.டெக். படிப்பை முடித்துள்ளார் அவ்னி. 


எம்பிஏ படித்த 2021- 23ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அண்மையில்தான் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. அங்கு படித்த 167 மாணவர்களுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக ஐஐஎம்  சாம்பல்பூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.    


ஆண்டு சராசரி ஊதியம் அதிகரிப்பு


கடந்த ஆண்டைக் காட்டிலும் 146.7% அதிக ஊதியத்தை ஐஐஎம் சம்பல்பூர் மாணவி பெற உள்ளார்.இதன்மூலம் கல்லூரியின் ஒட்டுமொத்த ஆண்டு சராசரி ஊதியம் 18.79 லட்சம் ரூபாயில் இருந்து 25.19 லட்சமாக அதிகரித்து உள்ளது.மாணவிகளின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.18.25 லட்சமாகவும் மாணவர்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.18.25 லட்சமாகவும் அதிகரித்து உள்ளது. 


ஐஐஎம் சம்பல்பூர் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 130 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் மைக்ரோசாஃப்ட் , அதானி, வேதாந்தா, டோலராம், ஜிண்டால் குழு, ஆதித்யா பிர்லா, மைக்ரான், ஜிஎம்ஆர், அமேசான், அசெஞ்சர், காக்னிசன்ட், ஐசிஐசிஐ, ட்ரெஸ்விஸ்டா, டெலாய்ட், இஒய், ராபர்ட் பாஷ், மெர்சிடிஸ் பென்ஸ், கேப் ஜெமினி, டாடா பவர் மற்றும் பென்னட் & கோல்மேன் உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த நிறுவனங்கள் இதில் அடக்கம்.


எந்தத் துறைக்கு அதிக வேலை?


விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (sales and marketing) துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலைகள் சாத்தியமாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பொது மேலாண்மை மற்றும் ஐடி பகுப்பாய்வு துறையில் அதிகப் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்தடுத்து வங்கித் துறை, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் ஐடி. துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.