மோசடி செய்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைக் குறிப்பில், மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் போலியான லிங்க் மூலமாக ஆன்லைன் பாதுகாப்பை உடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 


அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த எச்சரிக்கையை ஸ்டேட் வங்கி ரீட்வீட் செய்திருந்தது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஐ.டி காவல்துறையினர் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரையும் இரண்டு செல்ஃபோன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்த இரண்டு எண்களில் இருந்து அசாம் மாநிலத்தின் பல்வேறு வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பெறுவதோடு, மோசடியில் தள்ளப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனினும், அசாம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கும் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களும் புதிய எண்களில் இருந்து விடுக்கப்படும் ஃபோன் அழைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. 



அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 91-8294710946, +91-7362951973 ஆகிய இரண்டு எண்களில் இருந்து ஃபோனில் அழைப்பு விடுக்கப்படுவதாகவும், KYC எண்ணை அப்டேட் செய்வதற்காக இந்த மோசடியாளர்கள் அனுப்பும் ஃபிஷிங் லிங்கை அழுத்தக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இது போன்ற ஃபிஷிங் லிங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த எண்களில் வரும் அழைப்புகளைப் பொருட்படுத்தாமல், அவற்றில் இருந்து அனுப்பப்படும் ஃபிஷிங் லிங்கை அழுத்த வேண்டாம். அவை ஸ்டேட் வங்கியோடு தொடர்புடையவை அல்ல’ எனக் கூறியுள்ளது. 






ஃபிஷிங் என்றால் என்ன? 



பிறரை ஏமாற்றி போலியான இணைய லிங்களை அழுத்த வைப்பதன் மூலம், ஃபிஷிங் என்ற மோசடிக் குற்றம் அரங்கேற்றப்படுகிறது. அதிகாரப்பூர்வ நிறுவனங்களைப் போல சைபர் கிரிமினல்களால் பெரும்பாலும் ஈமெயில்கள், எஸ்.எம்.எஸ்கள் முதலானவற்றில் தனிநபர்களைக் குறி வைத்து இந்த லிங்க் அனுப்பப்படுகிறது. தற்போதைய ஸ்டேட் வங்கி மோசடிகளில், இந்த சைபர் கிரிமினல்கள் ஸ்டேட் வங்கி அதிகாரிகளைப் போல, ஃபிஷிங் லிங்கை அழுத்தி KYC விவரங்களைச் செலுத்துமாறு கூறி, தனி விவரங்களையும், வங்கி விவரங்களையும் திருடுகின்றனர். 


`கௌன் பனேகா க்ரோர்பதி’ குலுக்கல் போட்டியில் 25 லட்சம் ரூபாய் வென்றதாகக் கூறி, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து மெசேஜ்களின் மூலம் வாட்சாப் வாடிக்கையாளர்களைக் குறி வைக்கும் மோசடி செயலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான இந்த எண்கள் பாகிஸ்தானின் +92 என்ற தொடக்க எண்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பயனாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமீபத்தில் டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.