சாவர்க்கர் போஸ்டரை அகற்றியதாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கர்நாடகாவில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அம்மாநிலத்தின் துமகுரு பகுதியில் சாவர்க்கர் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கிழிக்கப்பட்ட பேனர்


துமகுரு பகுதியில் உள்ள எம்பிரஸ் கல்லூரி முன்பு வைக்கப்பட்ட இந்த பேனர் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்றைய மோதல் தொடர்பாக முன்னதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார், மூத்த காவல் துறை அதிகாரிகளுடன் ஷிவமோகாவில் ஆலோசனை நடத்தியுள்ளார்.


 






திப்பு சுல்தான் Vs சாவர்க்கர் பேனர்


நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நேற்று (ஆக.15) கோலகாலமாக நடைபெற்று முடிந்த நிலையில், கர்நாடகா மாநிலம், ஷிவமொகா மாவட்டத்தில் சாவர்க்கர், திப்பு சுல்தான் போஸ்டர்கள் அடங்கிய பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.


கர்நாடகா மாவட்டத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஷிவமோகா மாவட்டத்தில் பாஜகவினரால் போற்றப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்,  அங்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் போஸ்டரை அகற்றிவிட்டு, ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இடம்பெறும் போஸ்டரை மாற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.


வெடித்த மோதல்


இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். தொடர்ந்து அந்நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.


இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் தடியடி நடத்தி  கூட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இரு தரப்பினரின் போஸ்டர்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், அவ்விடத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.


 






தொடர்ந்து ஷிவமொகா பகுதியில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் காவலர்கள் இந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


மேலும், பதற்றம் ஏற்பட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும், கத்தியால் குத்தப்பட்ட நபர் குறித்தும் காரணம் குறித்தும் தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.