Congress Satyagraha Protest: கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிபோட்டுள்ளது. அவதூறாக பேசியதாகக் கூறி, ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம். 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்:


இதன் விளைவாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம், இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு காவல்துறை நிராகரித்தது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


ஸ்தம்பித்த டெல்லி:


இருப்பினும், தடையை மீறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, டெல்லி முழுவதும் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.


முன்னதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய ராகுல் காந்தி, "ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.


நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன்.


அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம் வந்தது எப்படி? மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இதுவரை அதற்கு பதில் இல்லை.


அதானி குறித்து நான் அடுத்த முறை பேசக்கூடாது என்பதற்காகவே என்னைத் தகுதி நீக்கம் செய்துள்ளனர். லண்டனில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க, மக்களவையில் சபாநாயகரிடம் அனுமதி கோரி இருந்தேன். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை” என்றார்.


சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 


மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த சட்டத்தின் கீழ்தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.