டெல்லியில் உள்ள ஆர்.கே. புரம் காவல்நிலையத்திற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.


காவல்துறை மறுப்பு:


டெல்லி காவல்துறை அதிகாரிகள், அவரை கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை காவல்துறை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை நாங்கள் கைது செய்யவில்லை. அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் அவர் தனது விருப்பத்தின் பேரில் வெளியேறலாம் என்று அவருக்குத் தெரிவித்துள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, சத்யபால் மாலிக் வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், அங்கிருந்த விவசாய குழுக்கள் மற்றும் கிராம அமைப்புகளின் தலைவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் அதன் பிறகுதான், காவல் நிலையத்திற்கு சத்யபால் மாலிக் சென்றதாகவும் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் காவல்துறை அனுமதியின்றி கூட்டம் நடத்தக் கூடாது என காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி சாட்சியமாக நேரில் ஆஜராகும்படி சிபிஐ நேற்று சத்யபால் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பியது.


இதுகுறித்து பேசிய சத்யபால் மாலிக், "மத்திய டெல்லியில் உள்ள சிபிஐ-இன் அக்பர் ரோடு விருந்தினர் மாளிகையில்  ஆஜராகும்படி சிபிஐ கேட்டுக் கொண்டது. சில விளக்கங்களை கேட்டுள்ளனர். நான் ராஜஸ்தானுக்குச் செல்கிறேன். அதனால், நான் ஏப்ரல் 27 முதல் 29 வரையிலான தேதிகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளேன்" என்றார்.


புயலை கிளப்பிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்:


கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணையம் முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது. 


பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவா மாநில ஆளுநராக சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், சமீபத்தில் அரசியலில் புயலை கிளப்பும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.