ரயில் பயணத்தின் போது 20 ரூபாய் விலைமதிப்புள்ள டீ-க்கு 50 ரூபாய் வரி விதித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


20 ரூபாய் டீக்கு 50 ரூபாய் வரி:


பயணி ஒருவர் டெல்லியில் இருந்து போபாலுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயிலில் டீ விலையை கேட்க 20 ரூபாய் என்று சொல்லவே அதை வாங்கியுள்ளார். ஆனால், பில்லை பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 20 ரூபாய் டீ-க்கு 50 ரூபாய் சேவை வரியுடன் சேர்த்து 70 ரூபாய் பில் போடப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.




இந்த பில்தொலையை சமூக வலைதளங்களில் பகிர, இந்த பில் தொகை வைரலாகிவருகிறது. அந்த பதிவில் “20 ரூபாய் டீக்கு 50 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக மாறிவிட்டது. இதுவரை வரலாறு தான் மாறியிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.






ரயில்வேயின் சுற்றறிக்கை:


இதற்கு பதிலளித்துள்ள ஒருவர் ரயில்வே நிர்வாகத்தைப் பொருத்தவரை ராஜ்தானி அல்லது சதாப்தி ரயிலில் பயணம் செய்யும் போது பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போதே உணவுக்கும் முன்பதிவு செய்துவிட்டால் கட்டணம் கிடையாது. ஆனால், பயணத்தின் போது உணவு வாங்கினால் சேவை வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.






வாடிக்கையாளர்களிடம் சேவை வரி வசூலிக்கக்கூடாது என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவுறுத்தியும், எல்லா ரெஸ்டாரண்ட்களிலும் சேவை வரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. நுகர்வோர் மன்றத்திடம் செல்லுங்கள்.. ஐஆர்டிசி டீ பற்றி புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளார்.






 கடந்த 2018ம் ஆண்டு இந்திய ரயில்வே ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் பயணி தங்கள் பயணத்திற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் போது ரயில்வேயின் கேட்டரிங் சேவையை பயன்படுத்துவதற்கும் சேர்த்து அப்போதே பில் செலுத்த வேண்டும். ரயிலில் ஏறிய பின் பயணத்தின் போது டீ, உணவு உள்ளிட்டவற்றை வாங்கினால் சேவைக்கட்டணமாக 50 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.




சதாப்தி, ராஜ்தானி ரயிலில் தான் இப்படி:


ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களில் இந்த முறை அமலில் இருக்கும் என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது. ஒரு கப் டீ வாங்கினாலும், ஒரு உணவுப்பொட்டலம் வாங்கினாலும் கூடவே சேவைக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ரயில்களில் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதையடுத்து உணவுகளுக்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.