கப்பல் துறை மற்றும் துறைமுகங்களின் வளர்ச்சியில் தமிழக அரசு, மத்திய பாஜக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.


வரும் 2047ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகள் நிறைவடையும் போது, முன்னணி 10 கடல்சார் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.


திமுக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்:


சென்னையில் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சரக்கு கையாளுதல், கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்குதல் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.


இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வெகு வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறிய மத்திய அமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில், பிரதமர்நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில், முதல் மூன்று பொரளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிவித்தார்.


உள்கட்டமைப்பு வசதிகளை உரிய நேரத்தில் உருவாக்குவதற்கு பிரதமர் மோடி எடுத்துக் கொண்டுள்ள முன்முயற்சியே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும் என்று அவர் கூறினார். மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை இந்தியா எவ்வாறு மேற்கொண்டு வருகிறது என்பதை உலக நாடுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


இதையும் படிக்க: Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?


கப்பல் துறை மற்றும் துறைமுகங்களின் வளர்ச்சியில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.


துறைமுகத்தின் பட விளக்கங்களுடன் கூடிய சிறப்பு மலரை மத்திய அமைச்சர் வெளியிட்டார். மேலும், ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், ரூ.520 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள  தூர்வாருதல் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்.


நிகழ்ச்சியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் இரினி சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அரசியல் ரீதியாக பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் திமுக அரசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சர்பானந்தா சோனோவால் பாராட்டி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.