சிறுவர்கள் விளையாட்டை சரளமான சம்ஸ்கிருத்தத்தில் கமெண்ட்ரி செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து , பிரதமர் மோடி அந்த நபரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.


ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு விளையாட்டுடன் ஒன்றி போவார்கள் , அந்த வகையில் இந்தியர்களுக்கு கிரிக்கெட் . அதனை வெறும் விளையாட்டாக கடந்து போகாமல் எமோஷனாக பார்க்கிறார்கள் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் வயதிற்கு ஏற்ப குழுவாக இணைந்து கிரிக்கெட்  விளையாடுவதை பார்த்திருப்போம். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறுவர்கள் சிலர் இணைந்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதனை வீடியோ எடுத்த நபர் ஒருவர் சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி கொடுக்கிறார். மேலும் வீடியோ எடுத்த நபர் அங்கிருந்த சிறுமி ஒருவரிடம் , சமஸ்கிருதத்தில் பேச , அவரும் அதே மொழியில் உரையாடுகிறார். இதனை லட்சுமி நாராயணன் என்பவர் ட்விட்டர் கணக்கில் பகிர வீடியோ , வைரலானது.






இதனை கண்ட மோடி , அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, சமஸ்கிருத மொழியில் கமெண்ட்ரி செய்ததை வெகுவாக பாராட்டியிருக்கிறார். "இது பார்ப்பதற்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது... இந்த முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு #MannKiBaat நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை காசியில் பகிர்ந்துகொண்டேன்." என குறிப்பிட்டுள்ளார்.






இதனை கண்ட வட இந்தியர்கள் பலரும் மோடியின் பதிவுக்கு கீழே  சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமஸ்கிருத கிரிக்கெட் விமர்சனம் குறித்த வீடியோவை பாராட்டியுள்ள பிரதமர் மோடியின் ட்வீட் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.