உத்தரகாண்ட் பகுதியில் மலைப் பகுதிகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு 50 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார், “பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தற்போது வரை 21 பேரை மீட்டுள்ளனர். அத்துடன் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 


 






இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு, உத்தரக்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி ஆகியோரும் தங்களுடைய இரங்கலை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி, “உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து மனதை மிகவும் பாதித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் அரசு உதவும் ” எனத் தெரிவித்துள்ளார்.


 






இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்த 25 பேர் ஒரு திருமண நிகழ்விற்காக லால்தங் மாவட்டத்திலிருந்து கிளம்பியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி பகுதியில் 29 மலை ஏற்ற வீரர்கள் பயிற்சிக்காக சென்ற போது பனிச்சரிவில் சிக்கியிருந்தனர். அவர்களில் தற்போது வரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.