தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அண்மையில் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். அத்துடன் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார்.


இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் அவர் தன்னுடைய புதிய தேசிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார். அவருடைய தேசிய கட்சிக்கு பாரதிய ராஸ்டிரிய சமிதி என்ற பெயர் வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்சி தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு 3வது அணியை கட்டமைப்பும் என்று கூறப்படுகிறது. 


 






தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியின் தொடக்க நாள் கொண்டாட்டத்தில் சந்திரசேகரராவ் அக்கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று முடிவை அறிவித்தார். அதில், “அரசியல் காரணங்களுக்காக பாஜக மதம் சார்ந்த விஷயங்களை முன்னெடுப்பதால் அதை எதிர்த்து தேசிய அரசியலில் களமிறங்க உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார். 


அதைத் தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சந்திரசேகரராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பாஜக அல்லாத அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 


வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு முன்பாக தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க சந்திரசேகரராவ் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.