அகில பாரதிய சத்ரா மாநாட்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷரத் பாப்டே நேற்று ( வெள்ளிக்கிழமை  ) பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தி மற்றும் ஆங்கிலம் சட்டப்படி ஆட்சி மற்றும் நீதிமன்றங்களில் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு தலைமை நீதிபதியும் அந்தந்த பிராந்திய மொழிகளை அறிமுகப்படுத்த கோரும் மனுக்களைப் பெறுகிறார்கள்.


இது இப்போது மாவட்ட அளவிலான நீதித்துறை மற்றும் சில உயர் நீதிமன்றங்களிலும் யதார்த்தமாக உள்ளது. உயர்நீதிமன்றத்தில், அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம் ஆகும், இருப்பினும் பல உயர் நீதிமன்றங்கள் விண்ணப்பங்கள், மனுக்கள் மற்றும் ஆவணங்களை பிராந்தியம் சார்ந்த மொழிகளில் சமர்ப்பிக்க அனுமதிக்கின்றன.


அலுவல் மொழி பிரச்னை:


அலுவல் மொழி பிரச்னை 1949 ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சம்ஸ்கிருத மொழியை ஏன் அலுவல் மொழியாக்க கூடாது எனக்கு தோன்றுகிறது.


சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்துவத, எந்த மதத்தையும் அறிமுகப்படுத்துவதாக இருக்காது. சமஸ்கிருத மொழி தென்னிந்தியா அல்லது வட இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, மதச்சார்பற்ற பயன்பாட்டிற்கு முற்றிலும் தகுதியானது.


”கணினிகளுக்கு மிகவும் பொருத்தமானது”


சமஸ்கிருத மொழியானது கணினிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்று நாசா விஞ்ஞானி "Knowledge Representation In Sanskrit and Artificial Intelligence" என்று கட்டுரையில் தெரிவித்துள்ளார். பிராந்திய மொழிகளில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது இந்தியர்கள் பல சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்கும் மொழி வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகே, நான் இதைச் சொல்கிறேன்.


சமஸ்கிருத மொழி கலப்பு:


உருது உட்பட ஒவ்வொரு பிராந்திய மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் மூலச் சொற்கள் உள்ளன. அசாமி, இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 60-70 சதவீதம் வரை சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன.


"இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை டாக்டர் அம்பேத்கர் தொடங்கியதாக 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் அம்பேத்கார் முன்மொழிந்தது போல சமஸ்கிருதம் ஏன் ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது என்றும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.


இந்தியாவில் சிலர் சில மொழிகளை தேசிய மொழியாக்க வேண்டும் கூறி வரும் நிலையில், சமஸ்கிருத மொழியை அலுவல் மொழியாக்கலாம் என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.