கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இது முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து குடியரசு தலைவரின் துணை ஊடக செயலாளர் நவிகா குப்தா கூறுகையில், "75ஆவது சுதந்திர தின விழா ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராஷ்டிரபதி பவன் தோட்டத்திற்கு அம்ரித் உத்யன் என்று பொதுவான பெயரை ​​குடியரசுத் தலைவர் சூட்டியுள்ளார்" என்றார்.


இருப்பினும், குடியரசு தலைவர் மாளிகை இணையதளத்தில் ராஷ்டிரபதி பவன் தோட்டத்தை முகலாயர் தோட்டம் என்றும் அம்ரித் உத்யன் என்றும் இரு பெயர்கள் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.


15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அம்ரித் உத்யன் குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகிறது. முன்னதாக, மத்திய அரசின் பெயர் மாற்றும் படலத்தின் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கிங்ஸ்வே சாலைக்கு ராஜ்பாத் சாலை என்றும் குயின்ஸ்வே சாலைக்கு ஜன்பத் சாலை என்றும் பெயர் மாற்றப்பட்டது.


குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் வைஸ்ராயின் பெயரை கொண்டிருந்த மிண்டோ பூங்காவின் பெயர் ஷாஹீத் பகத் சிங் உத்யன் என மாற்றப்பட்டது.


மற்றொரு கவர்னர் ஜெனரலின் பெயரை கொண்டிருந்த ஆக்லாந்து சதுக்கம், பெஞ்சமின் மோலோயிஸ் சதுக்கமாக பெயர் மாற்றப்பட்டது.


கர்நாடக மாநிலத்தில் மைசூரு - பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸை உடையார் எக்ஸ்பிரஸாக ரயில்வே பெயர் மாற்றியது. அதேபோல, மைசூருவில் இருந்து தலகுப்பா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கவிஞர் குவேம்புவின் பெயர் சூட்டப்பட்டது.


சமீபத்தில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி பேசியது பெரும் விவாத பொருளாக மாறியது. நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பாஜகவினர் மத்தியில் பேசிய மோடி, தெலங்கானா தலைநகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.


பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் பல பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.