உலகில் பல பழமையான மொழிகள் உள்ளன. குறிப்பாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற 5000 ஆண்டுகள் பழமையானவை என்பதற்கான சான்றுகள் உள்ளன. இதில், சமஸ்கிருதத்தை பேசுவோர் எண்ணிக்கை சொற்பமானதே ஆகும். 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 25,000 பேர்தான் பேசுகிறார்கள் என்பதற்கான தரவுகள் இருக்கின்றன.
எனவே, இதை செத்த மொழி என சிலர் குறிப்பிடுகின்றனர். இச்சூழலில், அஸ்ஸாமில் ஒரு கிராமத்தை சமஸ்கிருத கிராமம் என அழைக்கிறார்கள். ஏனெனில், 2015ஆம் ஆண்டு முதல் இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் சமஸ்கிருதத்தை பேசி வருகின்றனர்.
கரீம்கஞ்ச் மாவட்டத்தின் ரதாபரி சட்டப்பேரவை தொகுதியின் கீழ் வரும் பாட்டியாலா கிராமத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு தனிநபரும் இந்த மொழியில்தான் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 300 பேர் கொண்ட 60 குடும்பங்கள் உள்ளன.
அடுத்த தலைமுறையினரை இந்த மொழியைப் பேச ஊக்குவிப்பதன் மூலம் கிராம மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். சமஸ்கிருதத்தை போதுமான மக்கள் பேசுவதில்லை என இந்த கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த கிராமவாசிகள் யோகா நாள்களை ஏற்பாடு செய்து அனைவருக்கும் யோகா கற்று தருகின்றனர்.
யோகா ஆசிரியரான இந்த கிராமத்தில் வசிக்கும் தீப் நாத், "2013இல் யோகா நாள்களை தொடங்கியதாகவும், அதன் பிறகு, சமஸ்கிருத பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள் 2015 இல் இந்த கிராமத்திற்குச் வந்ததாகவும்" கூறுகிறார்.
விரிவாக பேசிய தீப் நாத், "2015 ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தில் சமஸ்கிருத நாள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு, நாங்கள் சமஸ்கிருதம் பேச கற்றுக்கொண்டோம். இப்போது இங்குள்ள ஒவ்வொருவரும் இந்த மொழியைப் பேசுகிறார்கள். எங்கள் கிராமத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் குழந்தைகளுடன், இந்த பழமையான மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர்.
நாங்கள் எங்கள் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். யோகா நாள் காலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் இங்கு சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. நாங்கள் ஒவ்வொரு மாதமும் காயத்ரி யாகத்தை நடத்துகிறோம், அதில் ஒவ்வொரு குடியிருப்பாளரும் பங்கேற்கிறோம்.
இங்குள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 பேர் பிற வேலைகளை செய்கின்றனர்" என்றார்.