சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது டெல்லியில் ஹவுஸ் ஹாஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த தலைப்பே மிகவும் சிறப்பாக இருக்கிறது. ’சனதான ஒழிப்பு மாநாடு’ என்று இருக்கிறது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்கக் முடியாது. கொசு, டெங்கு, காயச்சல், மலேரியா, கொரோனா இதையேல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனதானம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். ” என்று பேசியிருந்தது பேசுபொருளானது. அவருடைய கருத்துகளுக்கு எதிர்ப்புகளும் எழுந்தனர். பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியார் என்பவர், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு எரித்து, காலால் மிதித்து தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு உதயநிதி , “ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் கொரோனா ஒழிப்பு போன்று, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினேன். அதனால் அமித்ஷா, நட்டா போன்றவர்களும் என்னைப் பற்றி பேசுகிறார்கள்.
வட இந்திய சாமியார் ஒருவர் எனது தலைக்கு 10 கோடி ரூபாய் வருவதாக கூறியிருக்கிறார். சாமியரிடம் 10 கோடி ரூபாய் ஏது? அவர் டூப்ளிகேட் சாமியாரா? என சந்தேகம் எழுகிறது. 10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன். முன்னதாக, கலைஞர் தலையை சீவ ஒரு கோடி ரூபாய் தருவதாக ஒருவர் கூறினார்.. அதற்கு கலைஞர் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை நானே சீவ முடியாது என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி மீது டெல்லியில் மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.