கடந்த 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட திமுக இளைஞர் அணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பேசினார். இதற்கு பாஜக உள்ளிட்ட வலதுசாரி இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியார் என்பவர், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு எரித்து, காலால் மிதித்து தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மற்றும் டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பரமஹம்ஸ ஆச்சாரியார் இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவான குரல்களும் மிகவும் வலுவாகவே எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், சாமி கும்பிடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அது அவரவர் விருப்பம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப் படுகொலை செய்யவேண்டும் என்று கூறவில்லை. நான் கூறியதை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். நான் அன்று பேசியதை விட இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன்.
பிரதமர் மோடி காங்கிரஸ் முக்த் பாரத் என்று சொல்லுகிறார். அப்படியென்றால் அவர் காங்கிரஸின் கொள்கையை எதிர்கிறார் என்றுதானே அர்த்தம். இதைவிட்டு இருக்கின்ற காங்கிரஸ்காரர்களை அழைத்து கொலையா செய்யப்போகிறார்..? அது இனப்படுகொலை என்றால், நான் பேசியதும் இனப்படுகொலைதான்.
மாறாதது என்று எதுவுமே இல்லை. அந்தக் காலத்தில் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்றார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் என்று கூறினார்கள். அவை மாறவில்லையா? அதுபோல எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான்’’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.