காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமை நடைபயணம்:
எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், இயற்பியலாளரும் முன்னாள் ஐஐடி டெல்லி பேராசிரியருமான விபின் குமார் திரிபாதி, எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது.
ராகுல் காந்திக்கு பேர் வாங்கி தந்த நடைபயணம்:
நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம், கடந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி, இந்தாண்டு ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி வருகிற 7ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட அளவில் ஊர்வலங்களை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வழிகாட்டுதலின்படி, வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 5:00 முதல் மாலை 6:00 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு நடைபயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. தெற்கில் இருந்து வடக்கு வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் போல கிழக்கில் இருந்து மேற்கு வரை நடைபயணம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிக்க: Ethnic Cleansing: இதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது: மணிப்பூர் குறித்து பொங்கிய ப.சிதம்பரம்