நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


இந்தியாவின் சாதனையால் வியந்து போன உலக நாடுகள்:


நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.


அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.


பிரக்யானுக்கு அருகே தூங்க போகும் விக்ரம்:


இந்த நிலையில், இன்று காலை 8 மணி அளவில் விக்ரம் லேண்டரின் ஸ்லீப் மோட் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்ட பதிவில், "விக்ரம் லேண்டரின் ஸ்லீப் மோட் தொடங்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக, ChaSTE, RAMBHA-LP, ILSA போன்ற கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு பூமியில் பெறப்பட்டுள்ளது.


தற்போது, கருவிகள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. லேண்டரின் ரிசீவர்கள் ஆன் செய்யப்பட்டுள்ளன. சோலார் பவர் தீர்ந்து பேட்டரி தீர்ந்தவுடன் பிரக்யான் ரோவர் அருகில் விக்ரம் லேண்டர் தூங்கும் (ஸ்லீப் மோட்). வரும் செப்டம்பர் 22ஆம் தேதி, அவை மீண்டும் கண் விழிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


என்ன காரணம்?


நாம் வசிக்கக்கூடிய பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்று குறிக்கிறது. ஆனால் நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கிறது. நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் பகல் தொடங்கும் நாளில் லேண்டரை நிலவில் விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.


நிலவின்  மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவின் பகல்பொழுதில் 14 நாட்களுக்குள் முடிவிடக்கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இரவாக இருக்ககூடிய நிலையில், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளிக் கிடைக்காது.  இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால், லேண்டர், ரோவர் கருவிகள் இயங்காமல் போகவும் வாய்ப்பிருந்தது.