சனாதானத்தை ஒழித்துகட்டவேண்டும் என்று சொன்ன அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டுவருபவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு – என்று அறிவித்த சாமியார்தான் இப்போதைய ஹாட் டாப்பிக். அஸால்டாக ஒரு அமைச்சரின் தலையை வெட்டச் சொல்லி பேட்டி கொடுக்கிறாரே யாரு இந்த ஆளு..என்று பார்த்தால்.. ஒரு அக்மார்க் அக்யூஸ்ட் பேசும் அத்தனை அசிங்கங்களையும் பேசியிருக்கிறார் சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் இந்த பரமஹம்ச ஆச்சார்யா.

Continues below advertisement

ரிஷி தோற்றத்தில் இருக்கும் இவரது ரிஷிமூலம் என்ன என்று பார்த்தால்.. கடந்த 2019ல் உயிருக்கு பயந்து அயோத்தியை விட்டே ஓடியிருக்கிறார் பரமஹன்ஸ் ஆச்சார்யா. ராம் ஜன்மபூமி ந்யாஸ் என்று அழைக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கட்டும் குழுவின் தலைவரும், அயோத்தியின் பிரதான மதகுருவான மஹந்த் ந்ருத்ய கோபால் தாஸ் குறித்து இந்த பரமஹன்ஸ் தவறாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பானது. பொங்கி எழுந்த அயோத்தி சாமியார்கள் – தங்கள் தபஸ்வி கி ச்சாவ்னி என்ற அயோத்தி சாமியார்கள் அமைப்பில் இருந்தே இவரை நீக்கினர். அப்போதிலிருந்து தன்னைத்தானே ஜகத் குரு என்று சொல்லிக்கொண்டு, பரபரப்புக்காக எதாவது ஸ்டண்ட் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிரார் பரமஹன்ஸ் ஆச்சார்யா.

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை:

2021ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்துக்களின் நாடு என்று அறிவிக்காவிட்டால் சராயு நதியில் மூழ்கி ஜல சமாதி அடைவேன் என்று எச்சரித்தார். மேலும், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் பரபரப்பான உத்தரபிரதேச அரசு அவரை வீட்டுச்சிறையில் அடைத்தது. இதே காரணத்தை வலியுறுத்தி இவர் தீக்குளிக்கவும் முயன்றார். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

Continues below advertisement

 கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தின் பாடல் வெளியானபோது தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி உடைமீது சர்ச்சை ஏற்பட்டது. ஷாருக்கான் ஒரு ஜிகாதி என்று கூறி, அவரின் தோலை உரித்து, உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார் பரமஹன்ஸ் ஆச்சார்யா. ஷாருக்கான் மட்டும் இல்லை, அமீர்கான், சல்மான் கான் ஆகியோரையும் கொல்ல வேண்டும் என்று கூறிய அவர் இவர்களை கொல்பவர்களுக்கு பரிசுத்தொகையும் தரப்படும் என்று அறிவித்தார். உத்தரப்பிரதேச சட்டமன்ற கவுன்சிலில் உள்ள சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா ஹிந்துக்களின் புனித நூலை எரித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், மவுரியாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

வெறுப்பு பேச்சுகளின் உச்சத்தை இந்த ஆண்டு மார்ச்சில் தொட்டார் பரமஹன்ஸ் ஆச்சார்யா. ”நாட்டில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் என்னை பிரதமராக அறிவித்தால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் இனப்படுகொலை செய்துவிடுவேன்” என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல பசு குண்டர்களால் நடத்தப்படும் கொலைகளை ஆதரித்துப் பேசிய இவர், பசுவை யார் கொல்கிறார்களோ அவர்கள் திருப்பிக்கொல்லப்படவேண்டும் என்று கூறினார். ஆனால் அமைதியை போதிக்கவேண்டிய சாமியார் தோற்றத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசித் திரியும் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா ஒரு முறை கூட கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. எந்த நடவடிக்கையும் இவருக்கு எதிராக எடுக்கப்படவில்லை.