நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஜூலை மாதம் 14-ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த மாதம் 23-ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரில் இருக்கும் RAMBHA LP அறிவியல் கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டது. இதில் நிலவின் மேற்பரப்பு அருகே பிளாஸ்மா இருப்பதை அறிவியல் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளது. சூரிய வெப்ப காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது.
மேலும் ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
இப்படி பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்ததை தொடர்ந்து ரோவர் ஸ்லீப் மோட்டிற்கு சென்றது அதாவது தனது பணியை முடித்த பின் ரோவர் மற்றும் லேண்டர் இரண்டுமே செயலிழக்க வைத்து நித்திரையில் ஆழ்ந்தது. மேலும் சில நாட்களுக்கு முன் இஸ்ரோ விக்ரம் லேண்டரின் 3டி புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் சூழலில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சந்திரயான் -3 இன் லேண்டரின் புகைப்படத்தை எடுத்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 4 நாட்களுக்கு பின் அதாவது ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாசாவின் எல்ஆர்ஓ இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. சமூக ஊடக தளமான X இல் இந்த படத்தைப் பகிர்ந்த விண்வெளி நிறுவனம், "LRO விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை படம்பிடித்தது" என குறிப்பிட்டுள்ளது.
மேரிலாந்தில் உள்ள கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தால் LRO நிர்வகிக்கப்படுகிறது, வாஷிங்டனில் உள்ள ஏஜென்சியின் தலைமையகத்தில் உள்ள அறிவியல் இயக்க இயக்குனரகத்திற்காக இது இயக்கப்படுகிறது.