வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. 


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. அதேபோல,
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்:


ஆனால், இவை எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாக காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், "மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


9 பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்:


கூட்டத்தொடரில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம், ஐந்து நாட்களும் அரசாங்க அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான். நாங்கள் நிச்சயமாக சிறப்பு அமர்வில் பங்கேற்க விரும்புகிறோம்.
ஏனெனில், இது பொதுநலன் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்கும். தகுந்த விதிகளின்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.


1) தற்போதைய பொருளாதார நிலைமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.


2) விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள்.


3) அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக பல ஆய்வறிக்கைகள் வெளியாக வரும் நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வைக்கப்பட்டு வரும் கோரிக்கை.


4) மணிப்பூரில் அரசு இயந்திரம் தோல்வி அடைந்திருப்பது, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டிருப்பது.


5) ஹரியானா போன்ற மாநிலங்களில் மதக்கலவரத்தால் அதிகரித்துள்ள பதற்றம்.


6) லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது.


7) சாதிவாரி கணக்கெடுப்பின் அவசர தேவை.


8) மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சேதம்.


9) சில மாநிலங்களில் வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ள தாக்கம்.


மேல்குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் விவாதிக்கப்படும் என நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.