தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 10 நாள்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த மே 11ஆம் தேதி, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி. எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி சொன்னது என்ன?
தீர்ப்பை வழங்கிய டி. ஒய். சந்திரசூட், "சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும். நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நுழையாமல் இருப்பதில் நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதன் ஒரு பகுதியாகும்.
சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ஆவது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை ஆகியவற்றின் அடிப்படையுடன் தொடர்புடையது. எதிர்பாலீர்ப்பு தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே, தத்தெடுப்பு விதிமுறைகள் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. தன்பாலின தம்பதிகளுக்கு பாகுபாடு காட்டுகிறது" என்றார்.
"குழந்தையை தத்தெடுக்க பால்புதுமை தம்பதிகளுக்கு உரிமை உள்ளது"
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்பாலீர்ப்பு தம்பதிகளுக்கு செல்லும் பலன்கள், உதவிகள் ஆகியவை தன்பாலின தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டால் அது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். தனிச்சட்டம் உள்பட தற்போதுள்ள சட்டங்களின்படி, எதிர்பாலீர்ப்பு உறவுகளில் மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது.
பால்புதுமை தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத தம்பதிகளும் குழந்தையை தத்தெடுக்க உரிமை உள்ளது. பாலியல் அடையாளங்களை கண்டறிவதற்காக பால்புதுமை தம்பதிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து அவர்களை துன்புறுத்தக்கூடாது. பால்புதுமை தம்பதியினரின் உறவு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
தீர்ப்பை தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அது பின்வருமாறு:-
1) பால்புதுமை சமூகத்திற்கு எதிராக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பாகுபாடு காட்டக்கூடாது.
2) எதிர்பாலீர்ப்பு தம்பதிகளுக்கு செல்லும் பலன்கள், உதவிகள் ஆகியவை பால்புதுமை சமூகத்தவருக்கு அளிப்பதில் பாகுபாடு காட்டக் கூடாது.
3) மக்கள் மத்தியில் பால்புதுமை சமூகத்தவரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4) பால்புதுமை சமூகத்தவருக்கு அவசர உதவிக்கு உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.
5) பால்புதுமை சமூகத்தவருக்கு பாதுகாப்பான வீடுகளை உருவாக்க வேண்டும்.
6) அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஊடுபால் குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது.
இந்திய தலைமை நீதிபதியின் முடிவுகள் என்ன?
- இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
- காலம் காலமாக இந்தியாவின் இயற்கையான பாலினமாக பால்புதுமை சமூகம் உள்ளது.
- திருமண அமைப்பு, மாற்ற முடியாத அமைப்பு அல்ல.