பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதன் மூலம், அவர்கள் எப்படி கொலை செய்தனர், சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது பற்றிய முக்கிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.


அப்போது, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், நடிகர் சல்மான் கானைக் கொல்ல திட்டமிட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.


இந்நிலையில், மும்பை காவல்துறை தற்போது நடிகர் சல்மான் கானுக்கு Y+ கிரேடு பாதுகாப்பை வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரின் ஆட்கள், சல்மானுக்கு கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அதாவது 'X' பாதுகாப்பின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட 12 ஆயுதம் தாங்கிய காவலர்களில் இப்போது கமாண்டோக்களும் இடம் பெறுவார்கள். நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கு 'X' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் வைத்து சித்து மூஸ்வாலாவைக் கொன்றவர்தான் லாரன்ஸ் பிஷ்னோ. இவரின் ஆட்கள்தான், ஜூலை மாதம் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர்.


சல்மான் கானின் தந்தையும் எழுத்தாளருமான சலீம் கான் தனது வழக்கமான காலை நடைப்பயணத்திற்குப் பிறகு அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் யாரோ ஒருவர் விட்டுச்சென்ற காகிதச் சீட்டில் சன்மான் கானுக்கு மிரட்டல் விடுத்திருப்பதை கண்டார். "மூஸ் வாலாவுக்கு நாங்கள் செய்ததைச் செய்து விடுவோம்" என எழுதப்பட்டிருந்தது.


 






அதில், இரண்டு செட் இனிஷியல்கள் இருந்தது. ஜிபி மற்றும் எல்பி. அதாவது, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கனடாவைச் சேர்ந்த உதவியாளர் கோல்டி ப்ரார் ஆகியோரின் இனிஷியல்தான் இது எனக் கூறப்படுகிறது.


சல்மான் கானின் தினசரி பழக்க வழக்கங்கள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக, அவரின் பண்ணை வீட்டில் உள்ள சில ஊழியர்களுடன் குண்டர்கள் நட்பு கொள்ள முயன்றதாக டெல்லி காவல்துறை கடந்த மாதம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. ஆனால், லாரன்ஸ் பிஷ்னோய், அந்த மிரட்டல் கடித்தில் இருப்பதை மறுத்துள்ளார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கானைக் கொல்ல திட்டமிட்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.


சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த 'ஒய் பிளஸ்' பாதுகாப்பை வழங்க மாநில உள்துறை முடிவு எடுத்ததாக மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே - பாஜக அரசு விளக்கம் அளித்துள்ளது. சல்மான் கானுக்கு பல ஆண்டுகளாக அவரின் தனி பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.