Sahara Group Founder Died: சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் இறுதிச்சடங்கிற்காக, அவரது உடல் லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.


சுப்ரதா ராய் காலமானார்:


சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் தனது 75வது வயதில் மும்பையில் காலமானார். உடல்நலக்குறைபாடு காரணமாக நீண்ட காலமாக உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சுப்ரதாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று உத்தரப் பிரதேசத்தின் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.


சஹாரா குழும அறிக்கை:


இதுதொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மெட்டாஸ்டேடிக் வீரியம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் எழும் சிக்கல்களை எதிர்கொண்டு வந்த சுப்ரதாய்,  கார்டியோஸ்பிரேட்டரி அரெஸ்ட் (மூச்சுத்திணறல், இதய செயல்பாடு, அதனால் சுயநினைவு ஆகியவற்றை திடீரென இழப்பது) காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார். கடந்த ஞாயிறு அன்று உடல்நலக் குறைவு காரணமாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (KDAH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இழப்பை ஒட்டுமொத்த சஹாரா இந்தியா குழுமமும் ஆழமாக உணரும். சஹாராஸ்ரீ ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், வழிகாட்டியாகவும், அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார் இந்த சுப்ரதா ராய்..!


 1948-ம் ஆண்டு ஜுன் 10ம் தேதி  பீகாரில் உள்ள அராரியாவில் பிறந்த சுப்ரதா,  இந்திய தொழில்துறையின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.  'நிர்வாகத் தொழிலாளி' என்றும், தனது நிறுவனத்தை 'படை' என்றும் அழைக்க விரும்பினார். அந்த நிறுவனத்தில் அதிகபட்சமாக ஒரு காலத்தில் 12 லட்சம் பேர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. சுப்ரதா ராயின் குடும்ப்பத்தில்  மனைவி ஸ்வப்னா ராய் மற்றும் மகன்கள் சுஷாந்தோ ராய்,  சீமான்டோ ராய் ஆகியோர் உள்ளனர். முதல் தலைமுறை தொழில்முனைவோரான அவர், நிதி, ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, ஊடகம், சுகாதாரம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வணிக சாம்ராஜ்யத்தை வளர்த்தார். இந்தக் குழு 11 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்தது. இதன் மூலம் இந்த குழுமம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.


சஹாரா குழும பிரச்னை:


சுப்ரதா ராய் வணிகத்தில் வெற்றியை அடைந்த போதிலும், 2014ம் ஆண்டில் சஹாரா முதலாளி சில முதலீட்டுத் திட்டங்களுக்காக சந்தை கட்டுப்பாட்டாளர் SEBI உடன் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டார். பின்னர் அவை சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக உச்ச நீதிமன்றம் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனால் மே 2016 இல் பரோலில் வெளிவரும் வரை ராய் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திகார் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.