உச்சநீதிமன்றத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சக்திவாகினி என்ற தன்னார்வலர் தொடர்ந்திருந்த வழக்கில், 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள் மாநில அரசுகள் கலப்பு திருமணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கலப்பு திருமணங்கள் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக ஏன் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.


பாதுகாப்பு இல்லம்


இந்த நிலையில், டெல்லியில் தற்போது கலப்பு திருமணங்கள் செய்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கலப்பு திருமணங்கள் தங்குவதற்காக பாதுகாப்பு இல்லமும் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி, கிங்ஸ்வே முகாமில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு இல்லத்தில் 2 அறைகள், கழிப்பறை மற்றும் சமையலறை உள்ளது. மேலும், இதே இடத்திற்கு அருகில் மற்றொரு பாதுகாப்பு இல்லம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.




உறவினர்கள், உள்ளூர்வாசிகள் என தங்களது திருமணத்திற்கு ஆபத்து உள்ளது என்று கருதும் தம்பதிகள் இந்த இல்லங்களில் பாதுகாப்பாக தங்கலாம். காவல் துணை ஆணையர் தலைமையில் இந்த பாதுகாப்பு இல்லங்களுக்கு  உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் வழங்கப்படும்.


சிறப்பு பிரிவு 


பாதுகாப்பு இல்லங்கள் வேண்டாம் என்று கருதும் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலே உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சாதி, மத மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவை, 181 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.