ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பெரியளவிலான மத மோதல்கள் ஏற்படவில்லை எனவும், அவை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் ஊதி பெருக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்துடன் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜக்கி வாசுதேவ், தான் கல்லூரியின் பயின்ற போது நாடு முழுவதும் பெரியளவிலான மத மோதல்கள் நடைபெற்றதாகவும், அதோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிதாக மத மோதல்கள் நிகழவில்லை எனவும் கூறியுள்ளார்.
`மண் காப்போம்’ என்ற பிரசாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 27 நாடுகளில் 30 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் இந்தியா வந்தடைந்தார். மேலும், `உலக சுற்றுச்சூழல் தினத்தை’ முன்னிட்டு, கடந்த ஜூன் 5 அன்று பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்திருந்தது ஈஷா மையம். இதிலும் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டார்.
நாட்டில் அதிகரிக்கும் மதப் பிரச்னைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, `நாம் சில விவகாரங்களைக் கூடுதலாக பெரிதுபடுத்துகிறோம் என நினைக்கிறேன். சில விவகாரங்கள் விவாதங்களாக மாறியிருக்கின்றன. அதனால் தொலைக்காட்சிகளில் அதீதமாக வெப்பம் நிலவுகிறது. அதே நிலைமையை நீங்கள் தெருவில் பார்க்க முடியாது. டெல்லியிலோ, நாட்டின் எந்த கிராமத்திலோ நீங்கள் நடந்து சென்றால், இதுபோன்ற வன்முறை எதுவும் இல்லையென்பது உங்களுக்குப் புரியும்’ எனக் கூறியுள்ளார்.
வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள ஜக்கி வாசுதேவ், இந்த விவகாரத்தில் அனைத்தும் பெரிதுபடுத்தப்படுவதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் இதனால் கொதிநிலை நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், ஜக்கி வாசுதேவின் இந்தக் கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சமீபத்தில், அமெரிக்க அரசுச் செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் இந்தியாவில் மதச்சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறியிருந்தது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது கல்லூரிக் காலத்தில் இதுபோன்ற மத மோதல்கள் சாதாரணமானவையாகக் கருதப்பட்டதாகக் கூறிய ஜக்கி வாசுதேவ், `கடந்த 25 ஆண்டுகளாக மத மோதல் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. நாங்கள் கல்லூரியில் படித்த போது, ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் பெரிய மத மோதம் நிகழும். கடந்த 5,6 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை, இதுபோன்று எதையும் கேள்விப்படவில்லை. சில தவறான நிகழ்வுகள் துரதிருஷ்டவசமாக நடந்துள்ளது. எனினும், இந்த நாட்டில் சாதாரணமானவையாக கருதப்பட்ட மத மோதல் தற்போது ஏற்படாமல் இருப்பது மிகவும் நேர்மறையான விவகாரம்’ என்று கூறியுள்ளார்.