ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.


தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கூகுள் நிறுவனமானது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இதில் பங்கேற்க சுந்தர் பிச்சை, இந்தியா வந்துள்ளார்.


டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவில் உலகளாவிய டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் சுந்தர் பிச்சை சந்தித்தார். அப்போது, ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.


இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்புக்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் பிக்சல் போன் தயாரிக்க விரும்புகிறாராம் சுந்தர் பிச்சை. இதற்காகவே இந்திய பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.






இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்பு தொடர்பாக அரசு அதிகாரிகளையும் சுந்தர் பிச்சை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் சுமார் ரூ75,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே சுந்தர் பிச்சை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, பெருந்தொற்றுக்கு பிறகு, அரசு சேவைகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அரசு சேவைகளை பெற வேண்டும் என்றாலே அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.


ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை. அனைத்து விதமான அரசு சேவைகளை இணையம் வழியாக பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு 3,100 புதிய அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கிராமத்தை நோக்கி ஆட்சி முறை என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் நல்லாட்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு விதமான நற்செயல்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


ஐந்து நாள்களுக்கு கடைபிடிக்கப்படும் நல்லாட்சி தின பரப்புரையின்போது நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்களால் அடையாளம் காணப்பட்ட 3,120 புதிய சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது.


இதை, மத்திய பணியாளர், மக்கள் குறை கேட்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி விக்யான் பவனில் இன்று தொடங்கி வைக்கிறார். 


இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "நல்லாட்சி வாரத்தின்போது, நாட்டின் குறை தீர்க்கும் தளங்கள் ஒற்றுமையுடன் செயல்படும். மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPGRAMS) பெறப்பட்ட குறைகள், மாநில இணையதளங்களில் பெறப்பட்ட குறைகளுடன் நிவர்த்தி செய்யப்படும்.