கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த  கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 90,000 பக்தர்கள் என்ற எண்ணிக்கையில் தேவசம்போர்டு பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். சபரிமலை பக்தர்களுக்காக தேசவம்போர்டு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்தும் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

Continues below advertisement

அவர்களுக்கு தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) குளிர்சாதன பேருந்து (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

Continues below advertisement

இந்நிலையில் மேற்படி இயக்கத்தின் தொடர்ச்சியாக ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதி வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அதி நவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து நவம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.