கர்நாடகா மாநிலத்தில் பாலியல் பிரச்னை தீர மருந்து வாங்க சென்று ரூ.48 லட்சம் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீசில் அளித்துள்ள புகாரின்படி, “கடந்த மே 3ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மென்பொருள் பொறியாளரான தான் சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலியல் பிரச்னைகளுக்கான விரைவான தீர்வுகள் என்ற பெயரில் ஒரு விளம்பரம் கண்டேன். அங்கு சென்று என்னவென்று பார்த்தபோது அங்கிருந்தவர் என்ன பிரச்னை என விசாரித்தார். நான் அவரிடம் என்னுடைய பிரச்னையை தெரிவித்தேன். விஜய் குருஜி என்ற எங்களுடைய ஆயுர்வேத மருத்துவரால் குணப்படுத்த முடியும் என அவரிடம் அழைத்துச் சென்றார்.
விஜய் குருஜி என்னை பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் பூட்டி என்ற ஆயுர்வேத மருந்தை பரிந்துரைத்தார். அது தனது கடையில் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன் விலை 1 கிராம் ரூ.1.60 லட்சம் எனவும், இதனை ரொக்கமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நானும் என்னுடைய பிரச்னை தீர்ந்தால் போதும் என நினைத்து அதனை வாங்கினேன்.
அதன்பிறகு விஜய் குருஜி தன்னுடைய இன்னொரு தயாரிப்பான பவன் பூட்டி என்ற எண்ணெயை மறுவாரம் கொடுத்தார். அதன் விலை ரூ.76 ஆயிரம் என கூறி பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில வாரங்களில் குருஜி அறிவுறுத்தலின்படி ரூ.17 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை எனக்கு வழங்கினார். நான் மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் என்னை வற்புறுத்தி தேவராஜ் ரசபூட்டி என்ற மற்றொரு பொருளை ஒரு கிராமுக்கு ரூ.2,60,000 விலையில் வாங்கும்படி கூறினார். அதற்காக என்னுடைய நண்பரிடமிருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினேன். மொத்தத்தில், அந்த ஆயுர்வேதக் கடையில் சுமார் ரூ.48 லட்சம் செலவிட்டேன்.
ஆனால் குருஜி சொன்ன மருந்துகளை எடுத்துக் கொண்ட பின்பு என்னுடைய பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த மருந்துகளை சாப்பிட்டதால் எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விஜய் குருஜியை தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் இந்த மருத்துவ சிகிச்சையை நிறுத்தினால் உடல் நிலை மோசமடைய கூடும், இதனால் உயிரிழப்புகள் கூட நிகழலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். எனவே என்னை ஏமாற்றிய விஜய் குருஜி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பாதிக்க மென்பொறியாளர் 2023ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு பாலியல் ரீதியான உடல் நல பிரச்னைகளை அனுபவிக்க தொடங்கியதும், இதற்காக கங்கேரியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் விஜய் குருஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.