இன்று தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு மிகத் தீவிரமான இரவு நேர ஊரடங்கை கேரளா அறிவித்துள்ளது.


கேரளா சரசாரியாக 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை தினசரி சந்தித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில், 2,846 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 64 பேரிடம் ஒமிக்ரான் தொற்று  இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10 %க்கும் அதிகமாக உள்ளது.  


இரவுநேர ஊரடங்கு: 


கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, இன்று  முதல் அடுத்த நான்கு நாட்கள் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.  இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர இதர நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை. 


இரவு 10 மணிக்கு மேல், அனைத்து வகையான பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்களுக்கு அனுமதியில்லை.   


ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி:  


தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்பதால் சபரிமலை பக்தர்களுக்கு இந்த இரவுநேர ஊரடங்கில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 2022 ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று, மாலை  5 மணிக்கு மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை திறக்கப்படுகிறது.


முன்னதாக, கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் அதிகளவில் பக்தர்களை அனுமதிக்க  தேவசம்போர்டு முடிவு செய்திருந்தது. அதன்படி, கடந்த 15-ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த 60,000 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  


 



Caption


வழிகாட்டு நெறிமுறைகள்: 


சபரிமலைக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனை சான்றிதழை  பக்தர்கள் காண்பிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலல்லாமல்,  பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபர்மலை ஏறும் போது, சுவாசப் பிரச்சனை, நெஞ்சு வலி, தலை சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக  அவசர உதவியை பக்தர்கள் நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.