கவலையளிக்கும் விதமாக, நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது, கடந்த 3 வாரங்களில் இல்லாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும்.

  


இதற்கிடையே, அடுத்த சில நாட்களுக்குள் மிகப்பெரிய பெருந்தொற்று பாதிப்பு இந்தியாவில் ஏற்படும் என்றும், இது மிகக்குறுகிய கால பாதிப்பாக இருக்கும் (short-lived virus wave) என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிராக்கர் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் சரியான தன்மையை  முன்கூட்டியே கணிக்க பலர் தடுமாறிய போதிலும், மிகத் துல்லியமாக அதனைக் கணித்த வரலாறு கேம்பிரிட்ஜ் டிராக்கருக்கு உண்டு.


இந்தியாவில், கொரோனா பாதிப்புகளை நிகழ்நேரத்தில் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் பால் கட்டுமான், 'தி ப்ளூம்பெர்க்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.   


    


கடந்த 26ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 11 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 5% மேல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், ஆக்சிஸஜன் படுக்கைகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும்,  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம், மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு முன்னதாக வலியுறுத்தியது.    




சௌமியா சுவாமிநாதன்:  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டு குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ளவர்கள் என அனைவருக்கும் ஒமிக்ரான் பரவல் காணப்படுகிறது. ஆனால், எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுக்கப்பை தடுப்பூசி அளிக்கிறது. இது, நல்ல போக்கு என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 7,347 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,51,292 என அதிகரித்துள்ளது. தற்போது, வீடுகள் மற்றும் மருத்தவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 77,002 ஆக உள்ளது.   


 






உலக நாடுகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  பரவல் அதிகரித்து வரும் சூழலில்,  15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தவும், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மூன்றாவது டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.