பிற கோயில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.இதையடுத்து நாளை 31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பகல் 11.30 மணிக்கு நெய் அபிஷேகம், 12.30 மணிக்கு உச்ச பூஜை போன்றவை நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். முன்னதாக மகரவிளக்கையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். 11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடக்கிறது. மகரவிளக்கின் முன்னோடியாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் சுத்தி கிரியை பூஜைகள் நடைபெறும்.