கேரளா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சென்ற நிலையில் அதனால் விபத்து நிகழ்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசுர வேகத்தில் அரசு பேருந்துகள்
இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநில அரசுக்குட்பட்ட போக்குவரத்து நிர்வாகத்தால் பல வகையான அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்குகிறது. இப்படியான நிலையில் நெடுஞ்சாலை வந்து விட்ட பிறகு பைக் தொடங்கி பேருந்து வரை பல நேரங்களில் சாலை விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகிறது.
இதனால் விபத்து ஏற்பட்டு வாகன சேதம் தொடங்கி உயிர் சேதம் வரை நிகழ்கிறது. வேகமாக செல்வது நமக்கு மட்டுமல்லாம் நம்மால் பாதிக்கப்படுபவர்களும் எதிர்பாராத இழப்பு வழி வகுக்கும் என்பதால் சாலை விதிகளை எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது அந்த சாலையில் பயணித்த காரின் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது. கேரளாவின் நந்தியக்கரா என்னும் இடத்தில் தான் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரியாவின் நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்து ஒன்று அசுர வேகத்தில் வந்துள்ளது.
அப்போது முன்னால் வலது பக்கத்தில் கனரக ஈச்சேர் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேசமயம் அதற்கு முன்பாக வலது புறம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் இருந்து வந்த அந்த அரசு பேருந்து கனரக வாகனத்தின் இடது புறத்தில் ஏறி முன்னால் சென்ற காருக்கு வலது பக்கமாக குறுகலான இடத்தில் நுழைந்தது. இதனை சற்றும் எதிர்பாராத கனரக லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயல அது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் நுழைந்து எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கேரளாவை பொறுத்தவரை அங்கு அனைத்து விதமான வாகனங்களும் அசுர வேகத்தில் இயக்கப்பட்டு விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.