பிற கோவில்கள் போல் ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கூட்ட நெரிசல் குறைந்து இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஏராளமான அறைகள் உள்ளன. இவை அனைத்தும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ளன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது போல், சபரிமலையில் ஓய்வெடுக்க அறைகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், சபரிமலையில் அறைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருந்ததை பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்து ஏமாற்றம் அடைந்ததும் தெரியவந்தது. இணையதளம் போலியானது என்பதை அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் பணத்தை அபகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த போலி இணையதளத்தை (sannidanamguesthouse.in) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அரியானாவைச் சேர்ந்த ஹமீது என்பவருடைய செல்போன் எண் ஒன்றும், மற்றொரு எண் யாருடையது என்பதையும் தொழில்நுட்ப ரீதியாக சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போலி வலைத்தளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.