அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Continues below advertisement


அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் மோடி:


அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறையாக உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். மோடியின் இந்த பயணம், இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.


"இந்தியப் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றுவது இதுவே முதல் முறை. பிரதமர் அரசுமுறை பயணமாகச் செல்கிறார். இது மிக உயர்ந்த கவுரவத்தை குறிக்கிறது. அவர் பெறும் கவுரவம், வெகு சிலருக்கே, இதுவரை கிடைத்துள்ளது.


மோடியின் அமெரிக்க பயணம் பாகிஸ்தான், சீனாவுக்கு அனுப்பும் மெசேஜா?


அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு முறை உரையாற்றியதில்லை. எனவே, இது முதல் முறையாக இருக்கும். உலகம் முழுவதும், மிகச் சிலரே அதைச் செய்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா. எனவே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றியவர்கள் மிகக் குறைவு. முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதுகிறேன். அதன், விளைவுகள் பின்னர் பார்க்கலாம்" என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


மோடியின் அமெரிக்க பயணம், இந்திய அமெரிக்க உறவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "குறிப்பிடத்தக்க விளைவுகளை கொண்டிருக்கும். மேலும், இவை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும். அதை என்னால் இப்போது சொல்ல முடியாது.


இந்த பயணம், பாகிஸ்தான், சீனாவுக்கு எந்த மாதிரியான செய்தியை அனுப்பும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "ஒரு பிரதமர் ஒரு நாட்டிற்குச் சென்றால், அது நமது (இந்தியாவின்) உறவை முன்னேற்றுவதற்காகத்தான். இது ஒரு உலகமயமாக்கப்பட்ட உலகம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.


அதனால் ஏதாவது நடந்தால், அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். எங்கள் உறவுகளின் கண்ணோட்டத்தில், எங்கள் நலன்களுக்காக நாங்கள் அதைப் பார்க்கிறோம்" என்றார்.


பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜூன் 18ஆம் தேதி அமெரிக்காவின் 20 வெவ்வேறு நகரங்களில் ‘இந்திய ஒருமைப்பாட்டு அணிவகுப்பு’ நடத்தப்பட உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை சிறப்பித்துக் காட்டும் வகையில், ஜூன் 21ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.