தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாருக்கு ஆதரவு பெருகி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் சரத் பவாருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், சரத் பவாருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஸ்டாலின்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் சரத் பவார்:
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவை வீழ்த்தும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒற்றை புள்ளியில் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் முதல் முயற்சியாக பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. எதிர்க்கட்சிகள், இப்படி, அதிரடியாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர் சரத் பவார். மகாராஷ்டிராவில் எதிரெதிர் துருவங்களாக கருதப்பட்ட காங்கிரஸையும் சிவசேனாவையும் இணைத்து கூட்டணி ஆட்சி நடத்தியவர்.
ஆனால், தற்போது, இவருடைய கட்சியே இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும், சரத் பவாரின் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழலில், சரத் பவாருக்கு நேர்ந்துள்ள அரசியல் நெருக்கடி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மாஸ் காட்டும் சரத் பவார்:
இந்த நிலையில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் சரத் பவாருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், சரத் பவாருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், கட்சியின் தலைமையின் ஒப்புதல் இன்றி, தனது ஆதரவு எம். எல்.ஏக்களுடன் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தன்னுடைய அண்ணன் மகன், இரண்டாவது முறையாக கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது சரத் பவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள சரத் பவார், "1980களில் எனது கட்சி நெருக்கடியை எதிர்கொண்டது. எனவே, இது புதிய விஷயம் அல்ல. 1980இல் நான் வழிநடத்திய கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறினர். அப்போது, 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், நான் கட்சியை பலப்படுத்தினேன்.
என்னை விட்டு வெளியேறியவர்கள் அவர்களின் தொகுதிகளில் தோற்றனர். அஜித்திடம் இருந்து ஒரு அழைப்பு கூட வரவில்லை. கட்சியில் கலகம் செய்த கட்சிக்காரர்கள் எனது தனிப்பட்ட எதிரிகள் அல்ல" என்றார்.