டெல்லி மாமன்ற தேர்தல்:
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 250 மாநகராட்சி வார்டுகளில் 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி. பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையை காட்டிலும் அதிக இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 9 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியது.
துணைநிலை ஆளுநர் மீது குற்றச்சாட்டு:
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் விகே. சக்ஷேனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், டெல்லி மாநகராட்சியின் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாமன்றத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதை முன்னிட்டு, பாஜகவை சேர்ந்த சத்ய ஷர்மாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் விகே சக்சேனா உத்தரவிட்டார். இதனிடையே தங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே, பாஜக உடன் தொடர்புடைய 10 பேரை நியமன உறுப்பினர்களாக, ஆளுநர் நியமித்துள்ளதாகவும், அர்விந்த் கெஜ்ரிவால் குற்றாம்சாட்டி இருந்தார்.
மேயர் பதவிக்கான தேர்தல்:
இந்நிலையில், மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் அஷ்ஷூ தாக்கூர் ஆகியோரும், பாஜக சார்பில் ரேகா குப்தா பெயரும் முன்மொழியப்பட்டது. அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமார் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோரும் பாஜக சார்பில் கமல் பக்ரியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் பணி தொடங்கியது.
அவையில் தள்ளுமுள்ளு:
அப்போது, முதலில் நியமன உறுப்பினர்களை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள தற்காலிக சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், முதலில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், பாஜக- ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் வசைபாட, அவையிலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதவிபிரமாணம் செய்யும் மேடை மீது ஏறி ஒரு சில உறுப்பினர்கள் தாக்கிக் கொள்ள, சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த கூச்சல் குழப்பத்தால், டெல்லி மாமன்றம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரியான தற்காலிக சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார். இதனால் மேயர் தேர்தல் தடைபட்டுள்ள நிலையில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அத்துமீறி நடந்துகொண்டதாக பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.