உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தனது மாநிலத்தை பாதுகாப்பான முதலீட்டு இடமாக அறிவித்தார், மேலும் மும்பைக்குச் சென்ற போது முக்கிய பிரமுகர்களுடனும் பாலிவுட் பிரமுகர்களுடனும் உரையாடுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் வலுவான சட்டம் ஒழுங்கு நிலைமை, அச்சம் இல்லாத, நில மாஃபியா இல்லை எனவும் தொழிலதிபர்களுக்கு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை லக்னோவில் நடைபெறும் 3 நாள் 'உத்திர பிரதேச உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023'-ஐ விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள யோகி ஆதித்யநாத், அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ”2017க்கு முன், தினமும் கலவரம் நடந்து கொண்டிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இப்போது மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் வலுவாக உள்ளது. நாங்கள் நில மாஃபியா எதிர்ப்பு பணிக்குழுவை உருவாக்கி, 64,000 ஹெக்டேர் நிலத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து உரியவர்களிடம் அளித்துள்ளோம், மேலும் அரசு நிலங்களையும் மீட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ”உத்தரபிரதேசத்தில் எந்த தொழிலதிபரிடமோ அல்லது ஒப்பந்ததாரரிடமோ பணம் வசூலிக்கவோ அல்லது அவர்களை துன்புறுத்தவோ இன்று எந்த குண்டர்களும் இங்கு இல்லை என்றும், அரசியல் நன்கொடைகளை கூட வலுக்கட்டாயமாக எந்த கட்சியாலும் பெற முடியாது” எனவும் முதலீட்டாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
"எங்கள் குழு ஏற்கனவே 16 நாடுகள் மற்றும் 21 நகரங்களுக்குச் சென்று, UP உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023க்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு ₹ 7.12 லட்சம் கோடி முதலீட்டை ஈட்டியுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசம் சாலைகள், ரயில்வே மற்றும் விமானப் பாதைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் எளிதாக இணைப்பதில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நாட்டிலேயே ஒரே மாநிலமாக இது மாறப் போகிறது. இப்போது ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன. நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மாநிலத்திலிருந்து ஹால்டியா வரை நாட்டின் முதல் உள்நாட்டு நீர்வழி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடிய உத்திர பிரதேச முதல்வர், ”உங்கள் இரு திரையுலகைச் சேர்ந்தவர்களை நாங்கள் எம்.பி.க்களாக மாற்றியுள்ளோம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், சமூகத்தைப் பாதுகாப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உத்தரப் பிரதேசம் திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஆகியவற்றில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் போனி கபூர், கோரக்பூர் லோக்சபா எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷன், போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிருவா, பின்னணி பாடகர்கள் சோனு நிகம், கைலாஷ் கெர், நடிகர் சுனில் ஷெட்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் திவேதி, மதுர் பண்டார்கர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.