2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை ஜனவரி மாதத்திலேயே விண்ணப்பப் பதிவைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம் மட்டுமே ஒருவர் இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 

மருத்துவக் கலந்தாய்வு 

Continues below advertisement

நாடு முழுவதும் 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வு முடிவுகளை ஏற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

2023 நீட் தேர்வு எப்போது?

2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. எனினும் விண்ணப்பப் பதிவு எப்போது என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ஜனவரி மாதத்திலேயே தேசியத் தேர்வுகள் முகமை நீட் தேர்வுக்கானவிண்ணப்பப் பதிவைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 2023 வரை தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வில் பொதுவாக இயற்பியியல், வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் அல்லது எலக்டிவ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வித் தகுதி, பாடத்திட்டம், தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களை என்டிஏ விரைவில் வெளியிட உள்ளது. 

ஜேஇஇ மெயின் தேர்வு விண்ணப்பப் பதிவு

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு டிசம்பர் 16ஆம் தேதி அன்று தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் விண்ணப்பப் பதிவுக்கு இடையில், ஜனவரி 12 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வானது, ஜனவரி 24, 25, 27, 28, 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.