கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்திருந்தார். அவர் கிட்டத்தட்ட 36 மணி நேரம் மேற்கொண்ட அரசுப் பயணத்திற்கு தங்குமிடம், உணவு, தளவாடங்கள் போன்றவற்றுக்காக சுமார் 38 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் மத்திய தகவல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு முதல்முறையாக வந்த டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பல உயர் அதிகாரிகளுடன் பிப்ரவரி 24-25, 2020 அன்று அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு சென்றிருந்தார்.
பிப்ரவரி 24 அன்று கிட்டத்தட்ட மூன்று மணி நேர அகமதாபாத் பயணத்தின் போது, ட்ரம்ப் 22 கிமீ நீள சாலை பேரணியில் கலந்து கொண்டார். சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் புதிதாக கட்டப்பட்ட மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் "நமஸ்தே டிரம்ப்" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
பின்னர், அதே நாளில் தாஜ்மஹாலை பார்வையிட டொனால்ட் ட்ரம்ப் விமானம் மூலம் ஆக்ரா சென்றார். பிப்ரவரி 25 அன்று தேசிய தலைநகருக்குச் சென்ற அவர், அங்கு பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டின் முதல் பெண்மணியின் வருகையின் போது, உணவு, பாதுகாப்பு, தங்குமிடம், விமானங்கள், போக்குவரத்து உள்பட மொத்த செலவுகள் குறித்து மிஷால் பத்தேனா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த அக்டோபர் 24, 2020 அன்று, ட்ரம்பின் பயண விவரங்கள் கேட்டு மிஷால் பத்தேனா விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் முதல் மேல்முறையீட்டை தாக்கல் செய்தார். பின்னர, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உயர் மட்ட மேல்முறையீட்டு ஆணையத்தை அணுகினார்.
ஆகஸ்ட் 4, 2022 அன்று கொரோனா பெருந்தொற்றை மேற்கோள் காட்டி, பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக வெளியுறத்துறை அமைச்சகம் ஆணையத்திடம் விளக்கம் அளித்தது. இதுகுறித்து அமைச்சகத்தின் விரிவான அறிக்கையில், "நாட்டு தலைவர்கள்/அரசின் தலைவர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு புரவலன் நாடுகளின் செலவுகள் நன்கு நிறுவப்பட்ட சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி பின்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 24-25 தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதையொட்டி இந்திய அரசு தங்குமிடம், உணவு, தளவாடங்களுக்கு சில செலவுகளைச் செய்தது. செலவு தோராயமாக 38,00,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்