சாதிய தீண்டாமை ஒழிக்க புத்தகங்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட இன்றும் பள்ளிகளில் தீண்டாமை என்பது தலைவிரித்தாடுகிறது. அதற்கு சான்றாக அவ்வபோது வெளியாகும் குற்றச்சம்பவங்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தீண்டாமையால் பறிபோன உயிர்:
ஜூலை 20 அன்று, ராஜஸ்தானின் ஜலோரில் உள்ள பள்ளி ஒன்றில் உயர் சாதியினர் மற்றும் தாழ்ந்த சாதியினர் என இரு பிரிவுகளின் அடிப்படையில் குடிநீர் குடம் வைக்கப்பட்டிருக்கிறது. உயர் வகுப்பு மாணவர்களுக்காக வைக்கப்பட்ட குடத்தில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது தலித் சிறுவன் தண்ணீர் குடித்திருக்கிறார்.இதனை கண்ட தலைமை ஆசிரியர் ஷைல் சிங் தலித் சிறுவனை கொடூரமாக அடித்திருக்கிறார். இதனால் காது, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் சிறுவனம் அசைவற்று கிடந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து மாலை 4 மணியளவில் சிறுவனின் மாமாவிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஜோத்பூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரானா கிராமத்தில் இருந்து விரைந்திருக்கிறார்.சிறுவன் அப்போது வரையிலும் அசைவற்று கிடந்த நிலையில் , அவரது மாமா உள்ளூரில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு அடுத்தடுத்து தூக்கி சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கை விரித்துள்ளனர். இதனால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கும் சிகிச்சை பலனளிக்காததால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறுதிச்சடங்கை விரைந்து நடத்த கட்டாயம் :
கடந்த 15 நாட்களில் 5 நகரங்களில் உள்ள ஏழு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் சிறுவன் உயிர்பிழைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் இறுதிச்சடங்கை நடத்த உறவினர்களின் வருகைக்காக குடும்பத்தினர் காத்திருந்ததாகவும் , ஆனால் இறுதிச்சடங்கை உடனடியாக முடிக்கும் படி அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி தரப்பு விளக்கம் :
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் இந்த சம்பத்தில் தலைமை ஆசிரியரின் தவறு இருக்கிறது. ஆனாலும் இதில் சாதிய தலையீடு என்பது முற்றிலும் பொய். சிறுவர்கள் இருவரும் புத்தகத்திற்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் இங்குள்ள பொதுவான தண்ணீர் தொட்டியில்தான் அனைத்து சிறுவர்களையும் தண்ணீர் குடிக்க அனுமதிக்கிறோம். இங்கு உயர்ந்த சமூகத்திற்கு ஒரு குடம் , தாழ்ந்த சமூகத்திற்கு ஒரு குடம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை ஆசிரியர் இருவரையுமேதான் அடித்தார் “ என தெரிவித்துள்ளனர்.ஆனால் அந்த தண்ணீர் தொட்டியில் தற்போதுதான் சிமெண்ட் வைத்து பூசப்பட்டிருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இழப்பீடு :
தற்போது உயிரிழந்த சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு தொகை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவனின் இரண்டு சகோதரர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.