தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்படும் தகவல்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், இந்த தகவல்களை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் வாதிட முடியாது எனவும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தெரிவித்துள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம் கன்வில்கார், சஞ்சீவ் கண்ணா அடங்கிய குழு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறும் தகவல்களை சுட்டிக்காட்ட வேண்டாம். எங்களுடைய அனுபவத்தில் அந்த தகவல்கள் மிகுந்த நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. அந்த தகவல்கள் ஒன்றுக்கு பின் முரணாக இருக்கின்றது என தெரிவித்துள்ளனர்.






உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரைச் சேர்ந்த ஒருவர், தனியாருக்குச் சொந்தமான தனது நிலத்தில் கோரக்பூர் மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிடங்களை இடித்து வருவதாகவும், இடிபாடு வேலைகளை நிறுத்தாவிட்டால் அந்த பகுதியில் தங்கி இருக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வாழ இடமின்றி நிற்க நேரிடும் எனவும் புகார் அளித்திருந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில், இடிக்க முற்பட்ட இடம் குடியிருப்புக்கு சொந்தமான நிலம்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் உதய் ஆதித்யா பானர்ஜி, ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட இந்த தகவலை, கோரக்பூர் மேம்பாட்டு ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்ற குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை வழக்கறிஞர்கள் வாதிடும்போது சமர்ப்பிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 






உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் பலரும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லையென்றால், அதிகார பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்தும், அதிகார அமைப்புகளிடம் இருந்தும் பொதுமக்களால் எப்படி தகவல் திரட்ட முடியும். இதுவே ஒரே வழி” என கருத்து தெரிவித்துள்ளனர்.