நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்தச் சூழலில் கேரளாவில் ஸிகா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 28ஆம் தேதி 24 வயதான கர்ப்பிணி ஒருவர், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன்  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, புனே ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரி அனுப்பப்பட்டது. அதன் முடிவில் அந்த பெண்ணுக்கு ஸிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தச் சூழலில் ஸிகா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? அது எப்படி பரவும்?


ஸிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவும்?


டெங்கு,சிக்கன் குனியா வைரஸ்களை போல் ஸிகா வைரஸூம் கொசுவின் மூலம் ஏற்படும் நோய் தொற்று. இதை ஏடிஸ் கொசுக்குகள் நம்மை கடிப்பது மூலம் நமக்கு பரவும். மழை காலங்களில் தேங்கி இருக்கும் மழை நீரிலிருந்து இந்த வகை கொசு உற்பத்தியாகுகின்றன. ஒரு சில நேரங்களில் நோய் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்து கொள்ளும்போது ஸிகா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




இந்த நோய் முதல் முறையாக 1947ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த நோய் பரவல் மிகவும் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் ஸிகா வைரஸ் பரவியிருந்தது. இந்தியாவிலும் ஸிகா வைரஸ் இதற்கு முன்பாக பரவியுள்ளது. 


ஸிகா வைரஸ் நோய் அறிகுறிகள் என்னென்ன?


டெங்கு,சிக்கன் குனியாவை போல் ஸிகா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல், மூக்கடைப்பு, தலைவலி, அறிப்பு ஆகியவை தொடர்ந்து கொண்டு இருக்கும். அத்துடன் சேர்ந்து உடம்பு வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக தசை பகுதிகளில் அதிகளவில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகளுடன் உள்ளவர்கள் நிச்சயம் ஸிகா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 


ஸிகா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு ஆபத்தா?


ஸிகா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை எடுத்து கொண்டால் விரைவில் குணமாகும். 1 சதவிகித பேர் மட்டுமே தற்போது வரை ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆகவே ஸிகா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு பெரிய ஆபத்து இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 




ஸிகா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?


ஸிகா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டிபிடிக்கப்படவில்லை. ஆகவே டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு எடுக்கும் தடுப்பு நடவடிக்கையே இதற்கும் கடைபிடிக்க வேண்டும். அதாவது முடிந்த வரை எங்கும் நீர் தேங்காமல் இருக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொசுக்குள் பகல் நேரத்திலேயே அதிகம் கடிப்பதால் அந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க: கர்ப்பிணி ஒருவரைத் தொடர்ந்து கேரளாவில் மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு..!