வர்ணம் மற்றும் ஜாதி [சாதி] போன்ற கருத்துகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் நேற்று தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், இன்றைய சூழலுக்கு சாதி அமைப்பு ஏற்கத்தக்கது அல்ல என்றார்.


டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா போக்ரே எழுதிய வஜ்ரலிஸ்டீ துனக் என்ற புத்தக வெளியிட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "சமூக சமத்துவம் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அது பின்னர் மறக்கப்பட்டு மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்தது" என்றார்.


புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள்காட்டி பேசியுள்ள மோகன் பகவத், "வர்ணம் மற்றும் சாதி அமைப்பில் முதலில் பாகுபாடு இல்லை. அதனால், பயன்களே இருந்தன. இன்று யாராவது இந்த அமைப்புகளை பற்றிக் கேட்டால். அது கடந்தகாலம். அதை மறந்துவிடுவோம் என்றுதான் பதில் வரும்.


பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்தையும் பூட்டு போட்டு சேர்த்து வெளியேற்ற வேண்டும். முந்தைய தலைமுறையினர் எல்லா இடங்களிலும் தவறு செய்தனர். இந்தியா ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. 


நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தாழ்ந்தவர்களாகி விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது நடக்காது. ஏனென்றால் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்துள்ளார்கள்" என்றார்.


ஆர்எஸ்எஸ் தலைவர், இம்மாதிரியான கருத்துகளை தெரிவித்த போதிலும், சாதிய பாகுபாடு, கொடூரம், ஆணவ படுகொலைகள் என்பது தினமும் அரங்கேறி வருகிறது. 


பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதியத்திற்கு எதிராக பல தலைவர்கள் போராடினாலும், அது ஒழிந்த பாடில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. 


சமீபத்தில், கர்நாடகாவில் தலித் சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த சாதிய வன்முறை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. கோயிலில் உள்ள தெய்வத்தின் சிலையை சிறுவன் தொட்டதற்காக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அந்த சிறுவனின் குடும்பத்தை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் நிற்க வைத்தனர். 
உங்கள் மகன் சாமி சிலையை தொட்டதால் அவமரியாதையாகிவிட்டது. 


அதற்கு தண்டமாக ரூ.60 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றனர். கோயிலில் தலித் மக்கள் நுழையக் கூடாது என்ற விதிமுறையை மீறி உங்கள் மகன் நுழைந்துள்ளார் என்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.