சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரியில் தசரா திருவிழாவின்போது ராவணனின் உருவ பொம்மையில் ஒரு தலை கூட எரியாமல் போனதற்கு உள்ளாட்சி அமைப்பின் ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நான்கு அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






தம்தாரியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற உருவபொம்மை எரிப்பு நிகழ்வில் ராவணனின் தலைகள் எரியாமல் இருந்தபோது அதன் உடல் மட்டும் சாம்பலாக எரிந்து போயின. இதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.


ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் துர்கா பூஜை விழா தசராவுடன் நிறைவு பெறும். அந்த நாள் அன்று நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும். தீமைக்கு எதிரான போரில் நன்மை வெற்றி பெறுவதையே இந்த நிகழ்வு குறிக்கிறது. தம்தாரியில், ராவணனின் உருவபொம்மை எரிப்பு நிகழ்வு உள்ளாட்சி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.


தசரா கொண்டாட்டத்திற்குப் பிறகு, ராவணனின் உருவ பொம்மையை தயாரிப்பதில் அலட்சியமாக காட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட எழுத்தர் ராஜேந்திர யாதவை சஸ்பெண்ட் செய்து தம்தாரி முனிசிபல் கார்ப்பரேஷன் (டிஎம்சி) உத்தரவிட்டது.


2022ஆம் ஆண்டு தசரா கொண்டாட்டத்திற்காக ராவணனின் உருவ பொம்மையை தயாரிப்பதில் அலட்சியம் காட்டி கிரேடு - 3 உதவியாளரான ராஜேந்திர யாதவ், தம்தாரி முனிசிபல் கார்ப்பரேஷனின் இமேஜைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு பணியாளரான சமர்த் ரன்சிங்கிற்கு அவரது பொறுப்பு வழங்கப்பட்டதாக டிஎம்சியின் செயல் பொறியாளர் ராஜேஷ் பதம்வார் தெரிவித்துள்ளார்.


மேலும், உதவிப் பொறியாளர் விஜய் மெஹ்ரா மற்றும் துணைப் பொறியாளர்கள் லோமஸ் தேவாங்கன், கமலேஷ் தாக்கூர் மற்றும் கம்தா நாகேந்திரா ஆகிய நான்கு அலுவலர்களுக்கும், இது தொடர்பாக பதில் கேட்டு முனிசிபல் கார்ப்பரேஷனால் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனர் வினய் குமார் போயம் விடுமுறையில் இருப்பதால், பதம்வார் தற்போது குடிமை அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.


சிலை தயாரிக்கும் பொறுப்பை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணிக்கான ஊதியம் நிறுத்தப்படும் என்றும் தாம்தாரி மேயர் விஜய் தேவாங்கன் அறிவித்துள்ளார்.