மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த 38 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகிக் - அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியில் மோதி பேருந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவுரங்காபாத் சாலையில் உள்ள கைலாஸ் நகர் பகுதியில் சிந்தாமணி டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் பேருந்து யவத்மாலில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். தொடர்ந்து, பாதுகாப்பு துறை அமைச்சர் தாதா பூஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "யாவத்மாலில் இருந்து மும்பைக்கு வந்த பேருந்து, நாசிக்கில் இருந்து புனே நோக்கிச் சென்ற டிரக் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் நாசிக்கில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும்." என தெரிவித்திருந்தார்.