ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், சனாதன தர்மம், பாரத் பெயர் மாற்ற விவகாரம் ஆகியவை அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதில், இந்தியா பெயர் மாற்ற விவகாரம் சர்ச்சையாவதற்கு முன்பே, "இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்ற பெயரை மக்கள் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறியவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்.

Continues below advertisement

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக பாஜக செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்த கருத்து, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இடஒதுக்கீடு:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "நமது சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது. சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்" என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Continues below advertisement

இடஒதுக்கீடு குறித்து விரிவாக பேசிய மோகன் பகவத், "சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்தள்ளினோம். நாம் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது 2000 ஆண்டுகளாக தொடர்ந்தது. நாங்கள் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, சில சிறப்பு தீர்வுகளை வழங்க வேண்டும்.

அதில் இட ஒதுக்கீடும் ஒன்று. எனவே, அத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். நாம் பார்க்காவிட்டாலும் சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது.

அகண்ட பாரதம்:

இடஒதுக்கீடு என்பது மரியாதையை வழங்குவது போன்று. நிதி அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. 2000 ஆண்டுகளாக, குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் பாகுபாடுகளை எதிர்கொள்ளும்போது, பாகுபாட்டை சந்திக்காத நம்மால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு சில சிக்கல்களை ஏற்றுக்கொள்ள முடியாதா?" என்றார்.

அகண்ட பாரதம் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய மோகன் பகவத், "அகண்ட பாரதம் எப்போது வரும் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் அதற்காக உழைத்தால், நீங்கள் வயதாகிவிடும் முன், அது நிஜமாவதை நீங்கள் காண்பீர்கள். 

ஏனென்றால், இந்தியாவிலிருந்து பிரிந்தவர்கள் தவறு செய்ததாக நினைக்கும் சூழ்நிலைகள் மாறி வருகின்றன. அவர்கள் மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியாவாக மாறுவதற்கு அவர்கள் வரைபடத்தில் உள்ள கோடுகளை அழித்தால் போது என நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி நடக்காது. இந்தியாவாக இருப்பது இந்தியாவின் இயல்பை ("ஸ்வபாவ்") ஏற்றுக்கொள்வதாகும்.

தேசிய கொடி ஏற்றாததற்கு காரணம் என்ன?

சுதந்திரம் பெற்றதில் இருந்து 2002ஆம் ஆண்டு வரை, மஹால் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த மோகன் பகவத், "ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் நாங்கள் எங்கிருந்தாலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். நாக்பூரில் உள்ள மஹால் மற்றும் ரெஷிம்பாக் ஆகிய இரு வளாகங்களிலும் கொடியேற்றப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை மக்கள் எங்களிடம் கேட்கக் கூடாது" என்றார்.