சனாதன தர்மம் விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. முதலில், சனாதன தர்மம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. 


பேசுபொருளான சனாதனம் விவகாரம்:


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி, "சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான சனாதனத்தை டெங்கு, கொரோனாவை போன்று ஒழித்துக்கட்ட வேண்டும்" என பேசியிருந்தார். ஆனால், அவர் தெரிவித்த கருத்தை திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுக்கிறார்" என எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.


இந்து மக்களுக்கு எதிராக உதயநிதி பேசியதாக கருத்து பரவியது. பாஜக, இந்து அமைப்புகள், சனாதன கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சில மாநிலங்களில் அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. விமர்சனங்களுக்கு உதயநிதியும், திமுகவைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய ஆ.ராசா:


அந்த வகையில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும்‌ அல்ல. தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க இருக்கிறது.


தம்பி உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.


இந்த சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில் சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்" என்றார். உதயநிதியை தொடர்ந்து ஆ.ராசா பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக ஆ. ராமா பேசியுள்ளதாக வினீத் ஜிண்டால் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சனாதன விவகாரத்தில், உதயநிதிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Udhayanidhi Stalin: உதயநிதியின் சனாதன பேச்சை திரித்து வெளியிட்ட பாஜக ஐடி விங் தலைவர்? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!