பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். இதன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் நேற்று தொடங்கியது.


மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி:


அதில், மறைந்த சமாஜ்வாதி கட்சியின் (SP) நிறுவனர் முலாயம் சிங் யாதவ், சோசலிஸ்ட் தலைவர் சரத் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மற்றும் கடந்த ஓராண்டில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய 34 அமைப்புகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஓராண்டுக்கான அமைப்பின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கூட்டம் இதுவாகும்.  


பெண்களுக்கு பதவிகள்:


பொதுத் தேர்தலுக்குப் முன் நடக்கும் இந்த கடைசி வருடாந்திரக் கூட்டத்தில் அமைப்பில் எடுக்கப்பட உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கொள்ள உள்ள முக்கிய மாற்றங்கள், தேர்தல் ரீதியாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசம், பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கபடுமா என கேட்கப்பட்டதற்கு பதில் அளித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, "இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறோம். குறைந்தபட்சம் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்பதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியா முழுவதும் 71,355 இடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் இடங்களை அடைய இலக்கு வைத்துள்ளோம். அதாவது RSS-இன் 100வது ஆண்டாகும். தொற்றுநோய்க்குப் பிறகு ‘ஷாகாஸ்’ (ஆர்.எஸ்.எஸ்ஸின் மிகச்சிறிய பிரிவு) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.


ஆர்.எஸ்.எஸ். நாட்டை 911 மாவட்டங்களாகப் பிரித்துள்ளதால், 901 மாவட்டங்களில் எங்களது ஷாகாக்கள் அல்லது நேரடியாகப் பணியாற்றுகிறோம்.  911 மாவட்டங்களிலும் இதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த நூற்றாண்டு விழாவில் அமைப்பின் பணியை அதிகரிக்கும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட பிரசாரக்களும், விஸ்தாரக்களும் மக்களைச் சென்றடைவார்கள்.


2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், ‘ஆர்எஸ்எஸ்ஸில் சேருங்கள்’ என்ற திட்டத்தின் மூலம் அமைப்பில் சேர விரும்பும் 7,25,000 பேரின் விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்" என்றார்.